கொரோனா அச்சுறுத்தலால் உலகமே முடங்கியுள்ள நிலையில், உலகளவில் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. கொரோனாவிலிருந்து தப்பிக்க கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால், கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னரும் ஐபிஎல் தொடங்குவது சந்தேகமாகவே உள்ளது. 

வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்தப்படும், ரசிகர்களே இல்லாமல் நடத்தப்படும், வழக்கத்தைவிட குறைவான போட்டிகள் நடத்தப்படும் என பல்வேறு ஊகங்கள் உலாவந்த நிலையில், பிசிசிஐ எதுவாக இருந்தாலும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யும். 

இந்த சீசன் ரத்தாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சி.இ.ஓ பர்தாகூர் ஐபிஎல்லை நடத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பர்தாகூர், கொரோனா பாதிப்புக்கு பின் ஐபிஎல் போட்டிகளை குறைத்துக்கூட நடத்தலாம். வெளிநாட்டு வீரர்கள் வரமுடியாத சூழல் இருந்தால், இந்திய வீரர்களை மட்டுமே வைத்து நடத்தலாம். இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரை, இந்திய வீரர்களை மட்டுமே நடத்துவது குறித்து நாம் யோசித்ததில்லை. இப்போது அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய வீரர்களை மட்டுமே வைத்து நடத்தக்கூடிய அளவிற்கு இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமாக உள்ளனர்.

வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் இந்திய வீரர்களை மட்டுமே வைத்து போட்டிகளை குறைத்து நடத்தினாலும் அது ஐபிஎல் தான். ஆனால் இதுகுறித்து பிசிசிஐ முடிவெடுக்கும். ஐபிஎல் அணிகள் சார்பில் நாங்களும் எங்கள் கருத்தை தெரிவிப்போம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சி.இ.ஓ பர்தாகூர் தெரிவித்தார்.