ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன்  சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷாவை 2வது ஓவரிலேயே வெறும் 2ரன்னில் வீழ்த்தினார் உனாத்கத். தனது அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஷிகர் தவானை 9 ரன்னிலும், பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் அஜிங்க்யா ரஹானேவை 8 ரன்னிலும் வீழ்த்தினார் உனாத்கத். 

பவர்ப்ளேயில், பிரித்வி ஷா, தவான், ரஹானே ஆகிய மூவரையுமே ஒற்றை இலக்கத்தில் ஜெய்தேவ் உனாத்கத் வெளியேற்ற, பவர்ப்ளேயில் வெறும் 36 ரன்களை மட்டுமே அடித்து 3 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.

பவர்ப்ளே முடிந்த அடுத்த 7வது ஓவரை முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸை டக் அவுட்டாக்கி அனுப்ப, 37 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது டெல்லி கேபிடள்ஸ் அணி.

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டுடன் ஜோடி சேர்ந்த லலித் யாதவ், சிறப்பாக ஆடினார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 51 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆக, 5வது விக்கெட்டுக்கு ரிஷப்பும் லலித் யாதவும் இணைந்து 51 ரன்களை சேர்த்தனர்.

அதன்பின்னர் லலித் யாதவும் 20 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசியில் கிறிஸ் வோக்ஸ், டாம் கரன் ஆகியோர் இணைந்து சிறிய பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 147 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி அணி.

இதையடுத்து 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 வீரர்களான மனன் வோரா(9), ஜோஸ் பட்லர்(2), சஞ்சு சாம்சன்(4) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ராஜஸ்தான் அணி 17 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் டேவிட் மில்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் ஷிவம் துபே(2), ரியான் பராக்(2), ராகுல் டெவாட்டியா(19) ஆகியோர் சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, மில்லர் மீதான நெருக்கடி அதிகரித்தது.

ஆனாலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கையளித்த டேவிட் மில்லர், ஆவேஷ் கான் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசிய நிலையில், அதே ஓவரில் அவுட்டும் ஆனார். மில்லர் 43 பந்தில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் உனாத்கத் களத்திற்கு வந்தார்.

கடைசி 4 ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 17வது ஓவரில் உனாத்கத் ஒரு சிக்ஸர் விளாசினார். டாம் கரன் வீசிய 18வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு கிடைக்க, கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரபாடா வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்களை விளாசிய கிறிஸ் மோரிஸ், டாம் கரன் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி போட்டியை முடித்தார்.

கிறிஸ் மோரிஸின் கடைசி நேர அதிரடியால் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. கிறிஸ் மோரிஸ் 18 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.