ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவிடம் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ருத்ராஜ் கெய்க்வாட், ஜடேஜாவை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Rajasthan Royals Ask CSK For Rudraj Gaikwad, Jadeja In Place Of Sanju Samson: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலகி சிஎஸ்கேவில் இணைய விலக உள்ளதாக தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. மினி ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்கள் டிரேட் முறை மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு வெளியேற அல்லது மினி ஏலத்தில் பங்கேற்கும் வகையில் அணியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனை விட மறுப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ருதுராஜ் மற்று ஜடேஜாவை கேட்கும் ராஜஸ்தான் அணி
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சனை டிரேடு செய்ய வேண்டுமென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு முக்கிய வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை கொடுத்தால் மட்டுமே சஞ்சு சாம்சனை உங்களுக்கு கொடுப்போம் என ராஜஸ்தான் நிர்வாகம் சென்னை அணியிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
ராஜஸ்தான் உரிமையாளர் வைத்த நிபந்தனை
சஞ்சு சாம்சனை வாங்க விரும்பும் அணிகளிடம் அவரை டிரேடு செய்ய வேண்டுமென்றால் என்னென்ன வீரர்களை கொடுக்க வேண்டும் என்பதை ராஜஸ்தான் அணியின் இணை உரிமையாளர் சஞ்சய் படாலே தெரிவித்துள்ளார். சிஎஸ்கேவில் ருதுராஜ் மற்றும் ஜடேஜாவுடன், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவையும் ராஜஸ்தான் அணி கேட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஷிவம் துபே ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணியின் தூண் சஞ்சு சாம்சன்
ஆனால், ஜடேஜா மற்றும் கேப்டன் ருதுராஜை கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முன்வராது என தெரிகிறது. ராஜஸ்தான் அணிக்காக 149 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் அந்த அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார். இரண்டு சதங்கள், 23 அரைசதங்கள் உட்பட 4027 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு ராஜஸ்தான் அணி தக்கவைத்துக் கொண்டது.
சஞ்சு சாம்சன் வெளியேற காரணம் என்ன?
இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காகவும் தொடக்க ஆட்டக்காரராகவே விளையாடி வந்தார். ஆனால், கடந்த சீசனில் அவருக்கு காயம் ஏற்பட்டபோது, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அசத்தலாக ஆடியதால், சஞ்சுவின் இடம் பறிபோகும் சூழல் ஏற்பட்டது. இதுதவிர, கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சுவுக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டதும் அவர் அணியை விட்டு வெளியேற காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
