ஜெய்ப்பூரில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமையவுள்ளது. 

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் தான் இருந்துவந்தது. அதைவிட பெரிய ஸ்டேடியம் இந்தியாவின் அஹமதாபாத் நகரில் கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த அந்த ஸ்டேடியத்தின் திறப்பு விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டார். 

1.10 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில், அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட அஹமதாபாத் மொடேரா ஸ்டேடியம் தான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம். இரண்டாவது மிகப்பெரிய ஸ்டேடியம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம். அதில் 1.02 ரசிகர்கள் அமரலாம். இவையிரண்டும் தான் உலகின் டாப் 2 பெரிய ஸ்டேடியங்கள்.

இந்நிலையில், 75 ஆயிரம் இருக்கைகளுடன் உலகின் மூன்றாவது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை அமைக்க ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள சோன்ப் என்ற பகுதியில் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படவுள்ளது. 

நூறு ஏக்கர் பரப்பளவில், உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் இந்த ஸ்டேடியம் அமையவுள்ளது. பெரிய பெவிலியன் ஸ்டாண்ட், கார்ப்பரேட் பாக்ஸ், நவீன கிளப் ஹவுஸ், ஐசிசி விதிகளின் படி மின்விளக்குகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவிற்கு நவீன அறை, 4000 வாகனங்கள் நிறுத்த ஏதுவான பார்க்கிங் வசதி, 2 ரெஸ்டாரெண்ட் என மிகப்பிரம்மாண்டமாக அமையவுள்ளது இந்த ஸ்டேடியம். இன்னும் 4 மாதங்களில் ஸ்டேடியம் கட்டுமானப் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.