சையத் முஷ்டாக் அலி தொடரின் கடைசி காலிறுதி போட்டியில் பீகாரை பதினாறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாக் அவுட் போட்டிகள் அனைத்துமே அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் தான் நடக்கின்றன.
அந்தவகையில், நேற்றும் இன்றும், ஒருநாளைக்கு தலா 2 போட்டிகள் வீதம் 4 காலிறுதி போட்டிகள் நடந்தன. முதல் 3 காலிறுதி போட்டிகளில் முறையே, பஞ்சாப், தமிழ்நாடு, பரோடா அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின. கடைசி காலிறுதி போட்டி பீகார் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இரவு 7 மணிக்கு தொடங்கி நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி, மஹிபால் லோம்ராரின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது. லோம்ரார் 37 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 78 ரன்களை விளாசினார்.
இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பீகார் அணியில் மற்ற வீரர்கள் அனைவருமே சொதப்பலாக பேட்டிங் ஆட, மங்கல் மாரோர் மட்டும் தனி ஒருவனாக போராடினார். அரைசதமடித்த மங்கல் 68 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தும், பீகாரால் வெற்றி பெற முடியவில்லை. பீகார் அணி 20 ஓவரில் 148 ரன்கள் அடித்து பதினாறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி, அரையிறுதியில் தமிழ்நாடு அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் 29ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 29ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு தொடங்கும் முதல் அரையிறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பரோடா அணிகள் மோதுகின்றன.
