தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 11 சீசன்களில் 3 முறை சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 

2010, 2011, 2018 ஆகிய மூன்று சீசன்களிலும் கோப்பையை வென்றதோடு, 2008, 2012, 2013, 2015 ஆகிய நான்கு சீசன்களிலும் இறுதி போட்டி வரை சென்று கோப்பையை தவறவிட்டது சிஎஸ்கே. இதுவரை நடந்துள்ள 11 சீசன்களில் 7 சீசன்களில் இறுதி போட்டிவரை சென்ற அணி சிஎஸ்கே தான். இந்த 11 சீசன்களில் தடை காரணமாக 2 சீசன்களில் ஆடவில்லை. ஆடிய 9 சீசன்களில் 7 சீசன்களில் இறுதி போட்டியில் ஆடிய பெருமைக்குரியது சிஎஸ்கே அணி. 

சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக திகழ ஒரு காரணம் கேப்டன் தோனி. தோனியின் அனுபவமும் அவரது கேப்டன்சி திறனும் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம். 

தோனி, ரெய்னா, ஜடேஜா பிராவோ ஆகிய வீரர்கள் சிஎஸ்கே அணியின் நிரந்தர வீரர்களாக திகழ்கின்றனர். சிஎஸ்கே அணியில் ஆடிய மற்றும் ஆடும் வீரர்கள் பலர் சிஎஸ்கே அணி ஒரு குடும்பம் போல என்று கூறியுள்ளனர். ஒரு அணியை போல இல்லாமல் ஓய்வறையில் அனைவருமே ஒரு குடும்பத்தைப் போலத்தான் இருப்பார்கள் என்று பல வீரர்கள் கூறியுள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் வெற்றிக்கான காரணம் என்னவென்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ரெய்னா, சிஎஸ்கே அணியில் உள்ள ஒரு மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். அணியில் நிறைய மாற்றங்களை செய்யப்படாது. வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அணியாக சிறப்பாக ஆடுவதுதான் சிஎஸ்கே அணியின் வெற்றி ரகசியம். இந்த சீசனில் கூட இரண்டே இரண்டு புதிய வீரர்களைத்தான் அணியில் எடுத்துள்ளோம் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.