இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

எனவே டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட்டில் ஆடிவருகிறது. கடந்த 16ம் தேதி மான்செஸ்டரில் தொடங்கிய இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகியோரின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் அடித்துள்ளது. இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிக்கவிடாமல் சுருட்டும்பட்சத்தில், வெற்றி வாய்ப்பு இருந்தது. 

இந்நிலையில், மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்ததால், 2 செசன்களும் முழுமையாக பாதிக்கப்பட்டது. டீ பிரேக்கிற்கான நேரத்திற்கு பிறகும் மழை தொடர்ந்ததையடுத்து, மூன்றாவது செசனின்போது, இன்றைய ஆட்டம் ரத்து என அறிவிக்கப்பட்டது. அதனால் இன்றைய ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸையே இன்னும் ஆடாத நிலையில், 3 நாட்கள் ஆட்டம் முடிந்துவிட்டது. எனவே இன்னும் 2 நாட்களில் ஆட்டத்தில் முடிவு எட்டப்படுவது கடினம். எனவே இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அதனால் கடைசி போட்டியில் வென்றாலும் இங்கிலாந்து அணியால் தொடரை வெல்ல முடியாது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி போட்டியில் வென்றால் 2-0 என தொடரை வென்றுவிடும்.