ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துவிட்டன. 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஐபிஎல் தான் அதிக பணம் புழங்கும் லீக் தொடர். அதனாலேயே வெளிநாட்டு வீரர்கள், முன்னாள் வீரர்கள் ஆகியோர் ஐபிஎல்லில் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்து சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு முன்னாள் வீரர்களை பயிற்சியாளர்களாக நியமிப்பதைத்தான் விரும்புகின்றன. அடுத்த சீசனில் கூட, பஞ்சாப் அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுக்குமே வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் தான் தலைமை பயிற்சியாளர்களாக செயல்படவுள்ளனர். பஞ்சாப் அணிக்கு மட்டுமே அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக உள்ளார். 

இந்திய திறமைகள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுதை கண்டு அதிருப்தியடைந்த ராகுல் டிராவிட், இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், இந்திய வீரர்களை தலைமை பயிற்சியாளர்களாக இல்லாவிட்டாலும் உதவி பயிற்சியாளர்களாகவாவது நியமிக்கலாம். இந்திய வீரர்களை நியமிப்பதன் மூலம் அவர்களது திறமை கண்டிப்பாக ஐபிஎல் அணிகளுக்கு நல்ல பலனளிக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது. 

இந்தியாவில் இருக்கும் பல இளம் திறமைகளை உள்நாட்டு பயிற்சியாளர்களுக்குத்தான் நன்றாக தெரியும். எனவே அவர்களால் இளம் திறமைகளை எளிதாக கண்டறிந்து பயன்படுத்த முடியும். எனவே இந்தியர்களை பயிற்சியாளராக நியமிப்பது நல்ல உத்தியாக இருக்கும். ஆனால் அதை ஐபிஎல் அணிகள் தவறவிடுகின்றன. 

இந்திய பயிற்சியாளர்களுக்கு, இந்திய வீரர்கள் மீது நல்ல புரிதல் இருக்கும். வெளிநாட்டு பயிற்சியாளர்களை விட, சொந்த வீரர்களை இவர்களால் நன்றாக புரிந்துகொண்டு செயல்பட முடியும். இந்தியாவில் நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு தலைமை பயிற்சியாளராக இல்லாவிட்டாலும், உதவி பயிற்சியாளர்களாகவாவது வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.