ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த பொக்கிஷம். மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட தலைசிறந்த பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட், நல்ல பண்பாளரும் கூட. இந்திய அணிக்காக 1996ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை இந்திய அணியில் ஆடிய ராகுல் டிராவிட், 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13,288 ரன்களையும் 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,889 ரன்களையும் குவித்துள்ளார். 

தனது கிரிக்கெட் கெரியரில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமாக ஆடிராத ஒரு வீரர் ராகுல் டிராவிட். அணியின் நலனையும் வெற்றியையும் மட்டுமே கருத்தில்கொண்டு சூழலுக்கு ஏற்ப மட்டுமே, தனது கெரியர் முழுக்க பேட்டிங் ஆடியிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல பரிமாணங்களில் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார். 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ராகுல் டிராவிட், இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணிகளின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு, பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய திறமையான வீரர்களை மெருகேற்றி இந்திய அணிக்கு வழங்கியவர். 

இளம் வீரர்களை உருவாக்கும் பணியை செவ்வனே செய்ததுடன், 2018ல் அண்டர் 19 உலக கோப்பையை வெல்லவைத்தார். அண்டர் 19 இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்த ராகுல் டிராவிட்டுக்கு, கடந்த ஆண்டு வேறு பொறுப்பு வழங்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார் ராகுல் டிராவிட். அந்த பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். இப்படியாக தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்டுக்காக உழைத்துவருகிறார் ராகுல் டிராவிட். 

இந்நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின், பயிற்சியாளரானது குறித்தும், அதற்கு முன் கபில் தேவ் கூறிய அறிவுரை குறித்தும் டபிள்யூ.வி.ராமனிடம் பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சமயத்தில், அடுத்தகட்டமாக சில ஆப்சன்கள் இருந்தன. ஆனால் அப்போதைக்கு நான் எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நான் ஓய்வுபெறும் சமயத்தில் கபில் தேவ் எனக்கு ஒரு அறிவுரை கூறினார். அந்த அறிவுரை: “ராகுல் இப்போதைக்கு உடனடியாக எந்த முடிவும் எடுக்காதே.. உடனே உன்னை எதிலும் கமிட் செய்து கொள்ளாதே.. ஒருசில ஆண்டுகள் ஆராய்ந்து, அனைத்து விதமான விஷயங்களையும் நன்றாக கவனித்து, உனக்கு எது சரியாக வருமோ, எது வேண்டுமோ அதற்கேற்ப முடிவெடு” என்று கபில் தேவ் என்னிடம் சொன்னார். 

உண்மையாகவே அது மிகச்சிறந்த அறிவுரை. எனது கெரியர் முடிந்த சமயத்தில், நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனின் பயிற்சியாளர் ரோல் வந்தது என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார். அதன்பின்னர் டெல்லி கேபிடள்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். பின்னர் இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். தற்போது என்.எஸ்.ஏ-வின் தலைவராக இருக்கிறார்.