உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என்பதே பெரும்பாலான ஜாம்பவான்களின் கணிப்பு. 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கக்கூட வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரியே தெரிவித்திருக்கிறார். 

எனவே இந்த உலக கோப்பை ஒரு ஹை ஸ்கோரிங் உலக கோப்பையாக அமைய உள்ளது தெளிவாகிவிட்டது. இந்திய அணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பவுலிங் யூனிட் சிறப்பாக இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். தொடக்க மற்றும் டெத் ஓவர்களை பும்ரா பார்த்துக்கொள்வார். மிடில் ஓவர்களில் குல்தீப்பும் சாஹலும் இணைந்து எதிரணிகளின் பேட்டிங் வரிசையை சரித்துவிடுவர். இதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ளது. இதுதான் இந்திய அணியின் பலம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய டிராவிட், இது ஹை ஸ்கோரிங் உலக கோப்பையாக இருக்கப்போகிறது. இதுமாதிரி பேட்டிங்கிற்கு சாதகமான ஹை ஸ்கோரிங் போட்டிகளில் பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது. முடிந்தளவிற்கு எதிரணியை எந்த அணி கட்டுப்படுத்துகிறதோ அந்த அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு. அந்த வகையில் இந்திய அணிக்கு இது பலமே. பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பவுலர்கள். ஹை ஸ்கோரிங் போட்டிகளில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு. அந்த வகையில் இந்திய அணி மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்களை பெற்றிருப்பது பலம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துள்ளதோடு புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. எனவே இந்திய அணி சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தும். இது மிகவும் கடினமான, கடும் போட்டியான உலக கோப்பையாகத்தான் இருக்கப்போகிறது. அனைத்து அணிகளுமே பக்காவான திட்டங்களுடன் வரும். எல்லா அணிகளுமே வெற்றி பெற போராடும். இந்திய அணி கண்டிப்பாக உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி. அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி என்று டிராவிட் தெரிவித்தார். 

அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியின் தலைமை பயிற்சியாளரும் லெஜண்ட்ரி கிரிக்கெட்டருமான ராகுல் டிராவிட், ஆசிய கோப்பையின் போது ஆஃப்கானிஸ்தானை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது பேச்சை பொருட்படுத்தாமல் அலட்சியமாக ஆடிய இந்திய அணியால் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்த முடியவில்லை. போட்டி டிராதான் ஆனது. அதுபோல இல்லாமல் இந்த முறையாவது அவர் ஆலோசனையாக கூறவில்லை என்றாலும், அவரது பேச்சின் அர்த்தத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். பவுலர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.