ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் இந்த முறை நடக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகிவரும் நிலையில், ஐபிஎல் இந்த முறை நடப்பது சந்தேகமாகியுள்ளது. 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் நான்கு முறையும் சிஎஸ்கே 3 முறையும் கோப்பையை வென்றுள்ளன. கேகேஆர் அணி 2 முறை வென்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளும் ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளன.

ஆனால் ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் ஆகிய 3 அணிகள் மட்டும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. சிஎஸ்கே அணி, இதுவரை நடந்த 12 சீசன்களில் 2 சீசன்களில் ஆடவில்லை. ஆடிய 10 சீசன்களில் 8 முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அவற்றில் 5 ஃபைனலில் தோற்று, 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 

சிஎஸ்கே அணி ஒரு சீசனில் கூட பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் இருந்ததில்லை. ஆனால் ஆரம்பத்திலிருந்தே ராகுல் டிராவிட், கும்ப்ளே, ஜாக் காலிஸ், விராட் கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ், மிட்செல் ஸ்டார்க் என பல பெரிய வீரர்களை அணியில் பெற்றிருந்தும் கூட ஒருமுறை கூட ஆர்சிபி அணி ஐபிஎல் டைட்டிலை வென்றதில்லை. 

இந்நிலையில், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி கோலோச்சுவதற்கும் ஆர்சிபி அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாததற்குமான காரணத்தை ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட்,  ஐபிஎல் தொடங்கிய காலத்திலேயே மற்ற அணிகளை விட சிஎஸ்கேவிற்கு ஒரு பெரிய பலம் என்னவென்றால் அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தான். ஏனெனில் மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாதவர்கள். ஆனால் கிரிக்கெட் அணிகளை நிர்வாகம் செய்திருந்த சீனிவாசன் உரிமையாளராக இருந்ததுதான் அந்த அணிக்கு பெரிய பலம். அதனால் அணியை சரியாக வழிநடத்தினார்கள். 

ஆர்சிபி அணியால் சோபிக்க முடியாமல் போவதற்கு, முக்கியமான காரணம், ஏலத்தில் வீரர்கள் தேர்வில் மோசமான செயல்பாடுதான். ஆர்சிபி அணி ஏலத்தில் சிறந்த வீரர்களை எடுக்க தவறுகிறது. ஆர்சிபி அணி பேலன்ஸான அணியாக இல்லை. மிட்செல் ஸ்டார்க் அணியில் இருந்த போது நல்ல பேலன்ஸான அணியாக திகழ்ந்ததுடன் வெற்றிகளையும் பெற்றது. ஆனால் நல்ல பவுலர்களை எல்லாம் கழட்டிவிட்டு பேட்ஸ்மேன்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தியது மிகப்பெரிய தவறு. 

நான்கே நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் ஆடும் லெவனில் இடம்பெற முடியும். அதற்காக வெறும் வெளிநாட்டு வீரர்களையா வாங்கிக்குவிப்பதில் கவனம் செலுத்தும் ஆர்சிபி அணி, திறமையான உள்நாட்டு வீரர்களை அதிகமாக எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை. திறமையான உள்நாட்டு வீரர்களை அணியில் தக்கவைத்திருந்தால், கோர் டீம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அதை செய்ய ஆர்சிபி அணி தவறிவிட்டது.

சிஎஸ்கே அணி எப்போதுமே சிறப்பான அணியாக திகழ்வதற்கு, அந்த அணி வலுவான பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதுடன், நல்ல பேலன்ஸான அணியை பெற்றிருப்பதுதான் காரணம். ஏலத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் தேர்வு செய்வதில் கோட்டைவிடுகிறது என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.