உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை இந்திய அணி நிர்வாகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. 

ஆனால் அதற்கு ராயுடுவே ஆப்பு வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு படுமோசமாக சொதப்பியதும் தன்னம்பிக்கையில்லாமல் ஆடியதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றம். 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை. ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் நான்காம் இடம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. 

பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவித்துவரும் நிலையில், உலக கோப்பை அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார் சீனியர் வீரர் ரஹானே. வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் ரஹானே, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார். வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டை வைத்துள்ள ரஹானே, கடைசியாக 2018ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் ரஹானே ஆடவில்லை. இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் புறக்கணிக்கப்பட்ட ரஹானே, இந்தியாவில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார்.

இதற்கிடையே ரஹானேவை அணியில் எடுப்பது குறித்து பரிசீலித்துவருவதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். அதனால் இந்தியாவில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் ரஹானே சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஹானேவை சேர்க்கவில்லை. 

தொடர்ச்சியாக இந்திய ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டாலும், இன்னும் கூட, உலக கோப்பை அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார் ரஹானே. உலக கோப்பை அணியில் இடம்பெறுவதற்கு, ஐபிஎல்லை தனது கடைசி வாய்ப்பாக கருதும் ரஹானே, ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார். உலக கோப்பை அணியில் தன்னை புறக்கணிக்க முடியாத அளவிற்கு ஐபிஎல்லில் ஆட உள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மீண்டும் அதே நம்பிக்கையை தீவிரமாக வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல்லாக இருக்கட்டும் அல்லது எந்த தொடராக வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். அந்த வகையில் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினால் உலக கோப்பை அணியில் இடத்தை பிடிக்க முடியும். இப்போதைக்கு ராஜஸ்தான் ராயல்ஸை வெற்றி பெற வைப்பதை தவிர எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினால் உலக கோப்பையில் எனக்கான வாய்ப்பு தானாக வரும் என ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.