யுவராஜ் சிங்கிற்கு பிறகு இந்திய அணி, அவர் ஆடிய நான்காம் வரிசைக்கு இன்னும் சரியான வீரரை அணி நிர்வாகம் உறுதி செய்யவில்லை. உலக கோப்பைக்கு முன் 2 ஆண்டுகள் தேடுதல் படலம் நடத்தியும் எந்த வீரரையும் இந்திய அணி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ரஹானே, ரெய்னா, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ராயுடு ஆகியோரை அந்த வரிசையில் இறக்கிவிட்டு அணி நிர்வாகம் பரிசோதித்தது. ராயுடுதான் உலக கோப்பைக்கான நான்காம் வரிசை வீரர் என்று உறுதி செய்துவிட்டு கடைசி நேரத்தில் ராயுடு கழட்டிவிடப்பட்டு விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

உலக கோப்பையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர். இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. உலக கோப்பை அணியில் ரஹானேவை நான்காம் வரிசையில் இறக்கியிருக்கலாம் என்றும் அவரை அணியில் எடுக்காததற்கு கடும் அதிருப்தியும் தெரிவித்திருந்தார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர். பிசிசிஐ அதிகாரி ஒருவரே, இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு ரஹானே நல்ல தீர்வாக இருப்பார் என தெரிவித்திருந்தார். 

நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, உலக கோப்பை நடந்த இங்கிலாந்தில் நல்ல நம்பரை கொண்டிருக்கும் ரஹானேவை உலக கோப்பை அணியில் எடுக்காதது அனைவருக்குமே அதிருப்திதான்.

உலக கோப்பைக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியிலும் நான்காம் வரிசை வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் தான் எடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்தும் கூட, ஒருநாள் அணியில் இடம் கிடைக்காமல் ரஹானே தவித்துவருகிறார்.

இந்நிலையில், உலக கோப்பை அணியில் இடம்பெறாதது குறித்து பேசிய ரஹானே, தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரருக்குமே உலக கோப்பையில் ஆட வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அப்படித்தான். ஆனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம்தான் என்றாலும், அதையே நினைத்து கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துசெல்ல வேண்டும். 

கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிய 2 மாதங்களில் நிறைய கற்றுக்கொண்டேன். உலக கோப்பை அணியில் ஆடவேண்டும் என்பது கனவுதான். ஆனால் எதையுமே நான் பாசிட்டிவாக எடுத்துக்கொள்பவன். அதனால் அடுத்த உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே எனது தயாரிப்பை தொடங்கிவிட்டேன் என்று ரஹானே தெரிவித்துள்ளார்.