ராஞ்சியில் நேற்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, மயன்க் அகர்வால் புஜாரா, கோலி ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் 39 ரன்களுக்கே இழந்துவிட்டது. அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஜோடி சேர்ந்த ரோஹித்தும் ரஹானேவும் அந்த பணியை செவ்வனே செய்தனர். 

முதல் 3 விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்டதால், இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்த ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக ஆடினர். முதல் நாளான நேற்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பின்னர், இரண்டாவது செசனில் இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். இருவருமே அடித்து ஆடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ரோஹித் சர்மா அரைசதத்திற்கு பிறகு அடி வெளுத்துவிட்டார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ரஹானேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ரோஹித் சர்மா இரண்டாவது செசனிலேயே சதத்தை பூர்த்தி செய்துவிட்டார். டி பிரேக் முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது. 58 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிய 32 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னர் மழை பெய்ய தொடங்கியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் அடித்திருந்தது. ரோஹித் 117 ரன்களுடனும் ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை நேற்று விட்ட இடத்திலிருந்தே, அதே ஃபார்முடன் தொடர்ந்தனர் ரோஹித்தும் ரஹானேவும். ரஹானே சதத்திற்கு தேவைப்பட்ட 17 ரன்களை எளிதாக எடுத்து சதத்தை விளாசினார். 3 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் சதமடித்திருக்கிறார் ரஹானே. இன்றைய ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சீரான வேகத்தில் அடித்து ஆடி இடைவிடாமல் ஸ்கோர் செய்த ரோஹித் சர்மா, 150 ரன்களை கடந்துவிட்டார். 

ரோஹித் சர்மா இரட்டை சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்க, ரஹானே நன்றாக செட்டில் ஆகி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார். இருவருமே களத்தில் நிலைத்துவிட்டதால் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி திணறிவருகிறது.