Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND லண்டன் லார்ட்ஸில் ரஹானே - புஜாரா அபார சாதனை..!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் அடித்த இந்திய ஜோடி என்ற சாதனையை ரஹானே - புஜாரா ஜோடி படைத்துள்ளது.
 

rahane and pujara have done record as an indian pair in london lords in test cricket
Author
London, First Published Aug 15, 2021, 10:25 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 5 ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே, 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைப்போலவே அணியின் மற்றொரு சீனியர் வீரரான புஜாராவும் தொடர்ச்சியாக 10 இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

முக்கியமான பேட்டிங் ஆர்டரான 3 மற்றும் 5ம் வரிசைகளில் இறங்கும் புஜாரா மற்றும் ரஹானேவின் தொடர் சொதப்பலால், இந்திய அணியில் அவர்களது இடத்தையே சந்தேகத்திற்குள்ளாக்கி கேள்வியும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில், 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணியை அந்த மோசமான நிலையிலிருந்து மீட்டெடுத்தனர் அனுபவ வீரர்களான புஜாராவும் ரஹானேவும்.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 27 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ராகுல்(5), ரோஹித்(21), கோலி(20) ஆகிய மூவரின் விக்கெட்டையும் 55 ரன்களுக்கே இழந்தது. அடுத்த விக்கெட் விழுந்திருந்தால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்திருக்கக்கூட வாய்ப்புள்ளது.

ஆனால் அந்த இக்கட்டான நேரத்தில், பொறுப்பை உணர்ந்து பொறுமை காத்து தெளிவாக ஆடிய ரஹானேவும் புஜாராவும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்து கொடுத்தனர். சிறப்பாக ஆடிய புஜாரா 45 ரன்களிலும், அரைசதம் அடித்த ரஹானே 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ரிஷப் பண்ட்டும் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து ஆடிவருகின்றனர்.

ரஹானேவும் புஜாராவும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தனர். இதன்மூலம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்த இந்திய ஜோடி என்ற சாதனையை ரஹானே - புஜாரா ஜோடி படைத்துள்ளது. இவர்கள் இருவரும் அடுத்த போட்டியில் ஆடவேண்டுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பிவந்த நிலையில், சாதனை படைத்து சாதனை ஜோடியாக உருவெடுத்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios