இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் மட்டும் அமெரிக்காவில் நடக்கிறது. 

முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. எஞ்சிய ஒரு டி20 போட்டியும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ளது. 

இந்நிலையில், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் தொடர் குறித்து இந்திய அணிக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை எச்சரிக்கையாக விடுத்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் குறித்து பேசிய ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் அணி அபாயகரமான அணி. எப்போது எப்படி ஆடும் என்று கணிக்கமுடியாத அணி வெஸ்ட் இண்டீஸ். எனவே அந்த அணியை குறைத்து மதிப்பிட்டுவிடாமல் அவர்களுக்கு மதிப்பளித்து ஆட வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன் என்று ரஹானே தெரிவித்தார். 

உலக கோப்பை அணியிலேயே எடுத்திருக்கலாம் என பேசப்பட்ட ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் அணியிலும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ரஹானே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.