தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ரபாடாவின் மிரட்டலான வேகத்தில் தவானின் பேட் உடைந்தது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர் முடிவில் 227 ரன்கள் அடித்தது. 228 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அபாரமான சதமடித்து அணியை வெற்றி பெற செய்தார். 

சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்துகள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. அதனால் பேட்டிங் ஆடுவதற்கு சற்று கடினமாக இருந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. போட்டியின் சூழல், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றை நன்கு அறிந்த ரோஹித் சர்மா, இலக்கு எளிதுதான் என்பதால் அவசரப்படாமல் நிதானமாக நின்று ஆடினார். சதமடித்த ரோஹித் சர்மா, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். 

தென்னாப்பிரிக்க அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் ஸ்டெய்ன் மற்றும் இங்கிடி ஆகிய இருவரும் காயத்தால் ஆடாதது, ரபாடாவுக்கு கூடுதல் பொறுப்பையும் சுமையையும் ஏற்படுத்தியது. காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார் ஸ்டெய்ன். இங்கிடி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிராக ஆடவில்லை. அதனால் ரபாடா தனி ஒரு ஃபாஸ்ட் பவுலராக இந்தியாவுக்கு எதிராக போராடினார். மோரிஸ், ஃபெலுக்வாயோ ஆகியோர் இருந்தாலும், அவர்கள் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்கள் தான். ரபாடாவிற்கு துணைக்கு யாரும் இல்லை. 

எனினும் தனி ஒரு ஆளாக அபாரமாக வீசினார் ரபாடா. 10 ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சவுத்தாம்ப்டன் ஆடுகளம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. அதை பயன்படுத்திக்கொண்ட ரபாடா, நல்ல வேகத்தில் மிரட்டலாக வீசினார். ரபாடா வீசிய நான்காவது ஓவரின் கடைசி பந்தில் ஷிகர் தவானின் பேட் உடைந்தது. 146 கிமீ வேகத்தில் ரபாடா வீசிய அந்த பந்தை, தவான் அடிக்கும்போது பேட்டின் அடிப்பகுதியில் ஒரு பக்க விளிம்பில் அடித்ததால் பேட் உடைந்தது. அந்த வீடியோ இதோ..