உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி வரும் 5ம் தேதி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. 

உலக கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலியை தென்னாப்பிரிக்க இளம் ஃபாஸ்ட் பவுலர் ரபாடா சீண்டி பார்த்துள்ளார். 

ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு ரபாடா அளித்த பேட்டியில் கோலியை சீண்டியுள்ளார். கோலியுடன் ஐபிஎல்லில் நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். கோலி குறித்து பேசிய ரபாடா, ஐபிஎல்லில் எப்படி பந்துவீசுவது என்பதில் மட்டும்தான் எனது கவனம் இருக்கும். வீரர்களை சீண்டுவதை பற்றியெல்லாம் யோசிப்பதே கிடையாது. 

ஆனால் விராட் கோலி எனது பந்தை பவுண்டரி அடித்துவிட்டு என்னை நோக்கி ஒரு வார்த்தையை உதிர்த்தார். அடுத்து நான் ஒரு பந்தை வீசிவிட்டு அவரிடம் அதே வார்த்தையை சொன்னேன். ஆனால் அவர் கோபப்பட்டார். எதிரணி வீரர்களை அவர் சீண்டலாம். ஆனால் அவரை சீண்டினால் கோபப்படுவார். இதை முதிர்ச்சியற்ற செயலாகவே பார்க்கிறேன். கோலி முதிர்ச்சியற்றவர், பக்குவப்படாதவர். இதுபோன்ற நபர்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் முதிர்ச்சியற்றவர் என்று ரபாடா தெரிவித்துள்ளார்.