இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குயின்ஸ்லாந்து அணி 50 ஓவரில் 268 ரன்கள் அடித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மேக்ஸ் பிரியாண்ட் சிறப்பாக ஆடி 64 ரன்கள் அடித்தார். மார்னஸ் லபுஷேன் வழக்கம்போலவே பொறுப்புடனும் அபாரமாகவும் பேட்டிங் ஆடி 87 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். லபுஷேனின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் குயின்ஸ்லாந்து 268 ரன்கள் அடித்தது. 

269 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியில் மூன்றாம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஷான் மார்ஷும் அவருக்கு அடுத்த வரிசையில் இறங்கிய பான்கிராஃப்ட்டும் அபாரமாக ஆடினர். இருவருமே அரைசதம் அடித்து மூன்றாவது விக்கெட்டுக்கு 152 ரன்களை குவித்தனர். ஷான் மார்ஷ் 85 ரன்களிலும் பான்கிராஃப்ட் 72 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆட்டம் தலைகீழாக மாறியது. 

ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 218 ஆக இருந்தபோதுதான் பான்கிராஃப்ட் 4வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 45 பந்துகளில் 51 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கார்ட்வைட்டின் ரன் அவுட்டுக்கு பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி. கார்ட்வைட் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த குல்ட்டர்நைல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். குல்ட்டர்நைல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆரோன் ஹார்டி, மேத்யூ கெல்லி, கேம்ரூன் க்ரீன் ஆகியோர் அடுத்த என கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 11 ரன்களுக்கு இழந்தது வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா. 

231வது ரன்னில் 5வது விக்கெட்டை இழந்த அந்த அணி, 242 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.