இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிப்பதோடு, 300 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

இந்தூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி வெறும் 150 ரன்களை மட்டுமே அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்தார். அவர் மட்டுமே 243 ரன்களை குவிக்க, ரஹானே, புஜாரா, ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 493 ரன்களை குவித்தது. 

343 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, 213 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இரண்டு இன்னிங்ஸிலும் வங்கதேச அணியில் முஷ்ஃபிகுர் ரஹீம் மட்டுமே நன்றாக ஆடினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிலைத்து ஆடிய அவர் 64 ரன்கள் அடித்தார். ஆனால் தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில், அஷ்வின் வீசிய பந்தை தூக்கியடிக்க, அதை புஜாரா கேட்ச் பிடிக்க, முஷ்ஃபிகுர் நடையை கட்டினார்.

முஷ்ஃபிகுரின் இந்த கேட்ச்சை புஜாரா அபாரமாக பிடித்தார். வழக்கமாக புஜாரா ஓடுவதிலும் கொஞ்சம் ஸ்லோ, ஃபீல்டிங்கிலும் கொஞ்சம் மோசம் தான். ஆனால் இந்த கேட்ச்சை எந்த தவறும் செய்யாமல் சிறப்பாக பிடித்தார். அஷ்வின் வீசிய பந்தை முஷ்ஃபிகுர் சரியாக டைமிங் செய்யாமல் அடிக்க, அது ஸ்டிரைட் திசையில் மேலே ஏறியது. மிட் ஆஃப் திசையில் நின்ற புஜாரா, பின் திசையில் ஓடிச்சென்று அந்த கேட்ச்சை எந்த தவறும் செய்யாமல் பிடித்துவிட்டார். பொதுவாக பின்னால் ஓடிச்சென்று கேட்ச் பிடிப்பது சற்று கடினம். அதிலும் புஜாரா பிடித்தது பெரிய விஷயம் மட்டுமல்லாது பாராட்டுக்குரிய விஷயம்.