2019 உலக கோப்பை ஃபைனல் மாதிரி ஒரு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது ரொம்ப அரிது. வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு வரலாற்றில் இடம்பிடித்த போட்டி அது. 

இறுதி போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 242 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி ஸ்டோக்ஸின் கடும் போராட்டத்தால் 241 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி டிரா ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. ஆனால் அரிதினும் அரிதாக சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டு கோப்பையும் வழங்கப்பட்டது. 

நியூசிலாந்து அணியும் கோப்பைக்கு தகுதியான அணியே. தார்மீக அடிப்படையில் எந்த அணியுமே தோற்கவில்லை. ஆனால் ஐசிசி விதிப்படி கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. பவுண்டரிகளின் அடிப்படையில் போட்டியின் முடிவை அறிவிக்கும் வகையிலான ஐசிசி விதிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த விதியை மாற்றியமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், உலக கோப்பை ஃபைனல் குறித்து இந்திய டெஸ்ட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள புஜாரா, இறுதி போட்டியில் என்னை பொறுத்தவரை எந்த அணியும் தோற்கவில்லை. இரு அணிகளுமே கோப்பையை பகிர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஐசிசியின் முடிவுதான் இறுதி. எனக்கு அந்த விதிகளை பற்றியெல்லாம் தெரியவில்லை. ஆனால் இது நியூசிலாந்து அணிக்கு இழைக்கப்பட்ட அநீதி.  ஏனெனில் அவர்கள் அபாரமாக ஆடினார்கள். எது எப்படியோ அந்த போட்டி ஒரு அபாரமான போட்டியாக அமைந்து வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது என்று புஜாரா தெரிவித்துள்ளார்.