விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்ற தமிழ்நாடு அணியின் வெற்றி பயணத்திற்கு புதுச்சேரி அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 8ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பையையும், 2வது போட்டியில் கர்நாடகாவையும் வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, 3வது போட்டியில் பெங்காலை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே தொடரில் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, இன்றைய போட்டியில் புதுச்சேரியை எதிர்கொண்டு ஆடியது. போட்டி தாமதமாக தொடங்கப்பட்டதால் 49 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, புதுச்சேரி அணி முதலில் பேட்டிங் ஆடியது.

புதுச்சேரி அணி 75 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், மிடில் ஆர்டர் வீரர் ஃபபீத் அகமது அபாரமாக பேட்டிங் ஆடி 87 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. அவரது பொறுப்பான பேட்டிங்கால் 49 ஓவரில் புதுச்சேரி அணி 225 ரன்கள் அடித்தது.

போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் 44 ஓவரில் 206 ரன்கள் தமிழ்நாடு அணிக்கு விஜேடி முறைப்படி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாடு அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஜெகதீசன் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஜெகதீசன் ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தன. சிறப்பாக ஆடிய ஜெகதீசன் 64 ரன்களும், சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் 65 ரன்களும் அடித்தனர். அவர்களைத்தவிர மற்ற யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 

அதனால் 44 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் அடித்த தமிழ்நாடு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.