இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.

முதல் டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகிவருகின்றன. எனவே ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டுமென்பதே இரு அணிகளின் நோக்கமும். 

நியூசிலாந்துக்கு எதிரான மோசமான டி20 ரெக்கார்டை மழுங்கடிக்கும் விதமாக இந்த தொடரில் சிறப்பாக ஆடி தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் நல்ல வெற்றி விகிதத்தை பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி, அந்த ஆதிக்கத்தை தொடர்ந்து இந்திய அணியின் மீது செலுத்தும் முனைப்பில் உள்ளது. 

இரு அணிகளுமே வெற்றி வேட்கையில் இருக்கும் நிலையில் நாளை முதல் போட்டி ஆக்லாந்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.

ராகுல் தான் தொடக்க வீரர், அவர் தான் விக்கெட் கீப்பரும் என்பதை கேப்டன் கோலி உறுதி செய்துவிட்டார். எனவே ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக இறங்குவார். அடுத்தடுத்த வரிசைகளில் வழக்கம்போல விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இறங்குவர். ராகுலே கீப்பிங் செய்வதால், ரிஷப் பண்ட் இருக்கமாட்டார். எனவே மனீஷ் பாண்டே அந்த இடத்தில் ஆடுவார். 

ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் மூன்றாவது ஸ்பின்னராக குல்தீப் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி ஆகிய மூவரும் களமிறங்க வாய்ப்புள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி;

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஷமி, பும்ரா.