உலக கோப்பை தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே இதற்கு முன்னர் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த 2 அணிகளில் ஒன்று முதன்முறையாக உலக கோப்பையை வெல்வது உறுதியாகிவிட்டது. 

உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த உலக கோப்பையை இங்கிலாந்து அணிதான் வெல்லும் என ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோலவே இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. ஆனால் நியூசிலாந்து அணி இறுதி போட்டிவரை வரும் என பெரும்பாலானோர் நினைக்கவில்லை. ஆனால் கேன் வில்லியம்சனின் சிறந்த கேப்டன்சியாலும் அபாரமான பவுலிங்காலும் அந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

இங்கிலாந்து அணி பேட்டிங்கில் எவ்வளவுதான் வலுவாக இருந்தாலும் இந்த போட்டி அவ்வளவு ஈசியாக இருக்காது. இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியாகவே அமையும். அதுவும் லார்ட்ஸ் பிட்ச் கண்டிஷனை பார்க்கும்போது இது ஹை ஸ்கோரிங் போட்டியாக அமைய வாய்ப்பில்லை. அந்த வகையில் லோ ஸ்கோரிங் போட்டியாக இருக்கும்பட்சத்தில் நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. ஏனெனில் அந்த அணியின் பவுலிங் அபாரமாக உள்ளது. 

லீக் சுற்றின் கடைசி 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தாலும், அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தி தன்னம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது நியூசிலாந்து அணி.

இரு அணிகளுமே அரையிறுதி போட்டியில் ஆடிய அதே 11 வீரர்களுடன் தான் களமிறங்கும். இரு அணிகளிலுமே ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த அணிகள் நல்ல பேலன்ஸான வெற்றிகரமான அணிகளாக அமைந்துவிட்டன. எனவே இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இருக்காது. 

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், நிகோல்ஸ், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட் ஹோம், சாண்ட்னெர், ஹென்ரி, ஃபெர்குசன், ட்ரெண்ட் போல்ட். 

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.