பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றது. 

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் நாளை(21ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன. புதிய கேப்டனின் கீழ் பாகிஸ்தான் அணி இப்போதுதான் வலுவான கட்டமைப்பை அமைக்க முயன்றுவரும் நிலையில், ஸ்மித், வார்னர், லபுஷேன், மேத்யூ வேட் என ஆஸ்திரேலிய அணி அபாரமான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. 

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆஸ்திரேலிய அணி குறித்து பார்ப்போம். ஆடும் லெவன் குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், பேட்ஸ்மேன் பான்கிராஃப்ட் மற்றும் பவுலர் மைக்கேல் நெசெர் ஆகிய இருவரும் 12 மற்றும் 13வது வீரர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்துவிட்டார். எனவே அவர்கள் இருவருமே ஆடும் லெவனில் இடம்பெறமாட்டார்கள்.

எஞ்சிய 12 வீரர்களில் ஜேம்ஸ் பேட்டின்சன், உள்நாட்டு போட்டியில் ஸ்லெட்ஜிங் செய்ததற்காக ஒரு போட்டியில் தடை பெற்றிருப்பதால், மீதமிருக்கும் 11 வீரர்கள் தான் ஆடியாக வேண்டும் என்பது உறுதி. ஏனெனில் 14 பேர் கொண்ட அணியில் மூன்று வீரர்கள் ஆடமாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டதால், மற்ற 11 பேரும்தான் ஆடியாக வேண்டும். அப்படியே இந்த மூவரும் ஆடும் சூழல் இருந்திருந்தால் கூட, கீழ்க்கண்ட 11 வீரர்கள் தான் களமிறங்குவார்கள். 

தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் இறங்குவர். ஆஷஸ் தொடரில் அசத்திய லபுஷேன் மூன்றாம் வரிசையிலும் ஸ்மித் நான்காம் வரிசையிலும் இறங்குவார்கள். அதன்பின்னர் டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன் ஆகியோர் ஆடுவர். ஃபாஸ்ட் பவுலர்களாக கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோரும் ஸ்பின்னராக நாதன் லயனும் இருப்பார்கள். 

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன்.

பென்ச் : பான்கிராஃப்ட், மைக்கேல் நெசெர்.