ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் காயத்தால் வெளியேறிய ஸ்மித், நடந்துவரும் மூன்றாவது போட்டியில் ஆடவில்லை. ஆனால் நான்காவது போட்டியில் ஆடுவது உறுதியாகிவிட்டது. அவருக்கு பதிலாக ஆடிய லபுஷேன் அபாரமாக ஆடியதால், அடுத்த போட்டியில் ஸ்மித் அணிக்கு திரும்பினால் யார் நீக்கப்படுவார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. 

ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் தலைசிறந்த வீரரான ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக அணியில் இணைந்தவர் லபுஷேன். அவ்வளவு எளிதாக நிரப்பிவிட முடியாத ஸ்மித்தின் இடத்தை, அவர் இல்லாத குறை தெரியாத அளவிற்கு, ஸ்மித்தின் இடத்தை நிரப்பினார் லபுஷேன். 

லீட்ஸில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்துகொண்டிருக்க, மறுமுனையில் நங்கூரம் போட்டு 74 ரன்கள் அடித்தார். அவரது பொறுப்பான ஆட்டத்தால்தான் ஆஸ்திரேலிய அணி 179 என்ற ரன்னையாவது எடுத்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 67 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2வது இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த லபுஷேன், 80 ரன்களை குவித்தார். இதையடுத்து 359 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது.

ஸ்மித் காயத்தால் ஆடமுடியாமல் போனதை அடுத்து, இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பதிலாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் லபுஷேன். நடந்துவரும் மூன்றாவது போட்டியிலும் அபாரமாக ஆடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார். 

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்ட ஸ்மித், வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். எனவே அவர் நான்காவது போட்டியில் ஆடுவது உறுதியாகிவிட்டது. ஸ்மித் நான்காவது போட்டிக்கு வந்துவிட்டால், அணியிலிருந்து நீக்கப்படுவது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. 

ஏனெனில் ட்ராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ஆவரேஜ் வைத்த வைத்துள்ள சிறந்த வீரர். மேத்யூ வேட், முதல் போட்டியில் சதமடித்தார். லபுஷேன் அபாரமாக ஆடிவருகிறார். ஆஷஸில் கவாஜா சரியாக ஆடாவிட்டாலும் அவரும் நல்ல வீரர் தான். அவர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புதான் உள்ளது. 

இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங், நல்ல வேளை.. நான் தேர்வாளராக இல்லை. உஸ்மான் கவாஜா நீக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். ஆனால் அவர் சிறந்த வீரர் என்றார். அல்லது இன்னொன்று செய்யலாம். ஹாரிஸுடன் கவாஜாவை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, மூன்றாம் வரிசையில் லபுஷேன் மற்றும் நான்காம் வரிசையில் ஸ்மித்தை இறக்கலாம். ஆனால் அடுத்த போட்டிக்கான தேர்வு மிகவும் கடினமானதுதான் என்று பாண்டிங் தெரிவித்தார்.