கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வாரியர்ஸ் அணியின் தொடக்க சந்தர்பால் ஹேம்ராஜ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். சந்தர்பால் ஹேம்ராஜ் 66 ரன்களும் ஷிம்ரான் ஹெட்மயர் 48 ரன்களையும் விளாசினர். அதன்பின்னர் மிடில் ஆர்டர் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. பின்வரிசை வீரர் ரொமேரியோ ஷெப்பெர்டு அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 32 ரன்கள் அடித்தார். இதையடுத்து வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 185 ரன்களை குவித்தது. 

186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் டாப் ஆர்டர்கள் சொதப்பிவிட்டனர். லெண்டல் சிம்மன்ஸ், கோலின் முன்ரோ ஆகியோர் சோபிக்கவில்லை. தினேஷ் ராம்தினும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். ஆனால் டேரன் பிராவோவும் கேப்டன் பொல்லார்டும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். வெற்றியை நோக்கி நைட் ரைடர்ஸ் அணியை அழைத்து சென்றனர். 

இருவருமே அரைசதம் அடித்தனர். ஆனாலும் வெற்றிக்கான இலக்கை நெருங்கி அவர்களால் செல்லமுடியவில்லை. டெத் ஓவர்களை வாரியர்ஸ் அணி பவுலர்கள் நன்றாக வீசினர். அதிரடியாக ஆடிய பொல்லார்டு 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்தார். டேரன் பிராவோவும் கடைசிவரை களத்தில் இருந்தார். ஆனாலும் அவர்களால் இலக்கை எட்டமுடியவில்லை. பொல்லார்டு கடைசி ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் நைட் ரைடர்ஸ் அணி 166 ரன்களை மட்டுமே அடித்ததால் 19 ரன்கள் வித்தியாசத்தில் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. 

அதிரடி வீரரான பொல்லார்டு நன்றாக செட்டில் ஆகி அதிரடியாக ஆடியபோதிலும் கடைசி ஓவர் வரை அவர் களத்தில் இருந்தும் அந்த அணியால் வெற்றி பெறமுடியவில்லை.