தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது எதிரணி வீரர்களையும் தனது திறமைக்கு அடிமையாக்கியுள்ளார் என்று கூறினால் மிகையாகாது. அந்தளவிற்கு சமகால கிரிக்கெட்டில் அவர் கூடவும், அவருக்கு எதிராக எதிரணியில் ஆடும் எத்தனையோ வீரர்கள், அவரது ரசிகர்கள். ரசிகர்களாக மட்டுமில்லாமல் கோலியை ரோல் மாடலாகவே நினைக்கும் வீரர்கள் கூட இருக்கின்றனர். 

அப்பேர்ப்பட்ட சிறந்த வீரரான விராட் கோலி, களத்தில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் மட்டுமல்லாமல், எதிரணி வீரர்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்பது, வம்பிழுப்பது, ஸ்லெட்ஜிங் செய்வது, ஆக்ரோஷமான கொண்டாட்டம் என பல வகையில் ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்வார். களத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இருப்பவர் கோலி. 

கோலியின் உற்சாகம் அணி முழுவதும் பரவியிருக்கும். கோலியின் தலைமையில் ஆடும்போது மற்ற வீரர்களும் உற்சாகத்துடனேயே இருப்பார்கள். பேட்ஸ்மேனோ அல்லது பேட்டிங்கே ஆட தெரியாத பவுலரோ, இந்த வேறுபாடுகள் எல்லாம் இல்லாமல் ஒவ்வொரு விக்கெட்டையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார் கோலி.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில், டி20 போட்டிகளில் வில்லியம்ஸுக்கு அவரது பாணியிலேயே நோட்புக் கொண்டாட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்தார். அதன்பின்னர் வில்லியம்ஸ் வாயில் கை வைத்து கோலியின் விக்கெட்டை கொண்டாட, அதற்கடுத்த போட்டியில், வில்லியம்ஸின் பந்தில் சிக்ஸர் அடித்துவிட்டு, அவரது சிக்ஸரை அவரே வாயை பிளந்து பார்த்ததோடு, வில்லியம்ஸை கடுப்பேற்றினார். கோலியின் இதுபோன்ற செயல்கள் ஆட்டத்தை விறுவிறுப்பாக்கும். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார் கோலி. போட்டிக்கு பின்னர் இதுகுறித்து எதிரணி கேப்டன் பொல்லார்டிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பொல்லார்டு, அதை கோலியிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று பதிலளித்தார்.