இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்தது. 

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி கட்டாக்கில் நடந்துவருகிறது. மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகிய இருவரும் நிதானமாக தொடங்கினர். லூயிஸ் சீராக ரன்களை சேர்க்க, லூயிஸ் மந்தமாக பேட்டிங் ஆடினார். ஆனால் இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். 

முதல் விக்கெட்டுக்கு 57 ரன்களை சேர்த்தனர். மந்தமாக ஆடி 50 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்திருந்த லூயிஸை ஜடேஜா தனது சுழலில் வீழ்த்தினார். அதற்கு முன் அவரது கேட்ச்சை தவறவிட்ட நவ்தீப் சைனி, அடுத்த முறை அந்த தவறை செய்யாமல் சரியாக கேட்ச்சை பிடிக்க, லூயிஸ் நடையை கட்டினார். 

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹோப்பும் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தட்டுத்தடுமாறி ஆடிக்கொண்டிருந்த ரோஸ்டான் சேஸுடன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். சேஸ் நிதானமாக ஆட, ஹெட்மயர் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர், 33 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 37 ரன்கள் அடித்து நவ்தீப் சைனியின் பந்தில் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த சைனியின் ஓவரில் சேஸும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி 31.3 ஓவரில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. மிகவும் மோசமான நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை பூரானும் பொல்லார்டும் சேர்ந்து மீட்டெடுத்தனர். பூரானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பொல்லார்டு அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை மெதுமெதுவாக உயர்த்தினார். 

சிறப்பாக ஆடிய பூரான், அரைசதம் அடித்தார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் நன்றாக செட்டில் ஆன பின்னர், 40 ஓவருக்கு பின் இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். 40 ஓவர் முடிவில் 197 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. 41வது ஓவரில் வெறும் 7 ரன்களும் 42வது ஓவரில் 6 ரன்களும் மட்டுமே அடிக்கப்பட்டன. 42 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் மட்டுமே அடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி 8 ஓவரில் 105 ரன்களை குவித்தது. 

குல்தீப் யாதவ் வீசிய 43வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் பூரான். அதற்கடுத்து ஷமி வீசிய 44வது ஓவரில் ஒரே ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. ஷர்துல் தாகூர் வீசிய 45வது ஓவரில் பூரானும் பொல்லார்டும் சேர்ந்து 4 ரன்கள் மட்டுமே அடித்தனர். ஆனால் சைனி வீசிய 46வது ஓவரில் 3  பவுண்டரிகளுடன் பூரான் மட்டுமே 13 ரன்களை சேர்க்க, அந்த ஓவரில் மொத்தம் 14 ரன்கள் அடிக்கப்பட்டது. 

47வது ஓவரில் 10 ரன்கள். ஷர்துல் தாகூர் வீசிய 48வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய பூரான், அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 64 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார் பூரான். அதன்பின்னர் பொறுப்பை கையில் எடுத்த கேப்டன் பொல்லார்டு, சைனி வீசிய 49வது ஓவரை பொளந்துகட்டிவிட்டார். அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாச, அந்த ஓவரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோர் 299ஐ எட்டியது. 

ஷமி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹோல்டர் சிங்கிள் எடுக்க, அடுத்த 2 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசினார் பொல்லார்டு.  அதன்பின்னர் கடைசி 3 பந்தில் 3 சிங்கிள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 315 ரன்களை குவித்தது. 40 ஓவரில் 197 ரன்கள் என்ற சுமாரான நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி 10 ஓவரில் 118 ரன்களை குவித்து, இன்னிங்ஸின் முடிவில் 315 ரன்களை குவித்தது. பொல்லார்டு கடைசிவரை ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.

இந்திய அணிக்கு 316 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. ரோஹித், ராகுல், கோலி ஆகிய மூவரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் தான் இந்த இலக்கை எட்டமுடியும்.