ஐபிஎல் 13வது சீசன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தொடங்கியது. அபுதாபியில், இந்திய நேரப்படி 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.   

சிஎஸ்கே அணி:

ஷேன் வாட்சன், முரளி விஜய், ஃபாஃப் டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, லுங்கி இங்கிடி.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் களத்திற்கு வந்தனர். தீபக் சாஹர், முதல் ஓவரை வீசினார். தீபக் சாஹர் வீசிய முதல் பந்தையே கவர் திசையில் பவுண்டரி அடித்தார் ரோஹித். அதே ஓவரில் டி காக்கும் ஒரு பவுண்டரி அடிக்க, முதல் ஓவரிலேயே 12 ரன்களை குவித்தனர்.

சாம் கரன் வீசிய 2வது ஓவரிலும் ரோஹித் ஒரு பவுண்டரி அடித்தார். தீபக் சாஹர் வீசிய அடுத்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். ஓவருக்கு குறைந்தது ஒரு பவுண்டரி என, பவர்ப்ளேயில் நன்றாக தொடங்கினர் ரோஹித்தும் டி காக்கும். இங்கிடி வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகளை டி காக் விளாச மும்பை இந்தியன்ஸின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

4 ஓவரிலேயே 45 ரன்களை எட்டியது. பியூஷ் சாவ்லா விசிய 5வது ஓவரின் 3வது பந்தில் 12 ரன்களில் ரோஹித் சர்மா, சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து, சாம் கரன் வீசிய அடுத்த ஓவரிலேயே டி காக்கும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

5.1 ஓவரில் 48 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி  2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சூர்யகுமார் யாதவும் சவுரப் திவாரியும் இணைந்து ஆடிவருகின்றனர்.

வழக்கமாக பவர்ப்ளேயில், சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜனிடம் பந்தை கொடுத்து விக்கெட்டை அறுவடை செய்யும் சிஎஸ்கே கேப்டன் தோனி, இந்த சீசனில் ஹர்பஜன் ஆடாத நிலையில், அந்த பொறுப்பை, சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லாவிடம் கொடுத்தார். அதற்கான பலனும் கிடைத்தது. இன்னிங்ஸின் 5வது ஓவரை தனது முதல் ஒவராக வீசிய பியூஷ் சாவ்லா, அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே ரோஹித்தை வீழ்த்தி பிரேக் கொடுத்தார்.