பிக்பேஷ் லீக்கின் இன்றைய போட்டியில் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபின்ச் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸும் 14 ரன்களில் நடையை கட்டினார். சாம் ஹார்பரும் வெப்ஸ்டரும் இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

அதிரடியாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து ஹார்பர் அவுட்டாக, வெப்ஸ்டர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்தில் 59 ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி, 175 ரன்களை அடித்தது. 

176 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய பெர்த் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அபாரமாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஷும் லிவிங்ஸ்டோனும் இணைந்து 10 ஓவரில் 102 ரன்களை குவித்து கொடுத்தனர். லிவிங்ஸ்டோன் 39 பந்தில் 59 ரன்களையும் இங்க்லிஷ் 33 பந்தில் 51 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர். இவர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி பெர்த் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.