பிக்பேஷ் லீக்கில் இன்றைய போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸும் மோதின. அடிலெய்டில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கேப்டன் அலெக்ஸ் கேரியை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.

கேப்டன் அலெக்ஸ் கேரி மட்டும் பொறுப்புடன் ஆடி, 59 பந்தில் 82 ரன்கள் அடித்தார். அவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால், 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே அடித்தது. 147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் லிவிங்ஸ்டோன் 8 ரன்களில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய காலின் முன்ரோ ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடினார். 32 பந்தில் 49 ரன்கள் அடித்தார். 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை, அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்லிஷும் மிட்செல் மார்ஷும் இணைந்து அருமையாக ஆடி கடைசி வரை இழுத்துச்சென்று 18வது ஓவரிலேயே அணியை வெற்றி பெற செய்தனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்திய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.