குஜராத் டைட்டன்ஸூக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு அணிகளுமே கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கின.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், பிரதீப் சங்வான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஹா 21 ரன்னில் நடையை கட்டினார். ஹர்திக் பாண்டியா(1), டேவிட் மில்லர்(11), ராகுல் டெவாட்டியா(11), ரஷீத் கான்(0) ஆகியோர் ஒருமுனையில் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் நடையை கட்ட, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்ஷன் அரைசதம் அடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று குஜராத் அணி 143 ரன்கள் அடிக்க உதவினார். சாய் சுதர்ஷன் 50 பந்தில் 64 ரன்கள் அடித்தார்.

144 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். லிவிங்ஸ்டோன் 10 பந்தில் 30 ரன்கள் அடிக்க, 16வது ஓவரிலேயே இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இதற்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடிய 9 போட்டிகளில் ஒரேயொரு தோல்வியை மட்டுமே அடைந்திருந்த நிலையில், இந்த போட்டியில் 2வது தோல்வியை பரிசளித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.