ஐபிஎல் 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அடுத்த ஆண்டு 13வது சீசன் நடக்கவுள்ளது. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடள்ஸ் அணி, கடந்த 2 சீசன்களாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அணியை வளர்த்தெடுத்துவருகிறது. 

ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்சியாளராகவும் இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாகவும் நியமித்தது. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 2018 சீசனின் முதல் பாதியில் சொதப்பினாலும் இரண்டாவது பாதியில் நன்றாக ஆடியது. ஆனாலும் பிளே ஆஃபிற்கு முன்னேறவில்லை. 

ஏற்கனவே பாண்டிங் என்ற ஜாம்பவான் இருந்த நிலையில், கடந்த சீசனில் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் கங்குலி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த சீசனில் அபாரமாக ஆடி பிளே ஆஃபிற்கு முன்னேறியது டெல்லி கேபிடள்ஸ் அணி. ஆனால் அந்த அணி எலிமினேட்டர் போட்டியில் வென்றாலும், இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்று வெளியேறியது. 

இந்நிலையில், அடுத்த சீசனிற்கு இந்திய அணியின் ஃபிசியோவாக இருந்த பாட்ரிக் ஃபர்ஹத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அணியின் ஃபிசியோவாக இருந்த பாட்ரிக்கின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. அவர் இந்திய வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்தி ஃபிட்டான இந்திய அணியை உருவாக்கி கொடுத்தார். இந்நிலையில், அவரை டெல்லி கேபிடள்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

டெல்லி அணி வீரர்களை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் பயிற்சியாளர், ஃபிசியோ என அனைத்திலுமே சிறந்ததை தேடித்தேடி ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.