கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல் 13வது சீசன், வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளன. எனவே ஐபிஎல் அணிகளும் வீரர்களும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றனர். 

இதற்கிடையே, இந்தியா - சீனா இடையேயான உறவில், எல்லையில் சீனாவின் அத்துமீறிய தாக்குதலால் பெரும் விரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாக, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான பல கடும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது. ஹெலோ ஆப், ஷேர் இட், டிக் டாக் உள்ளிட்ட 49 சீன செயலிகளையும் அதைத்தொடர்ந்து மேலும் சீன செயலிகளையும் தடை செய்தது இந்திய அரசு. அதேபோல இந்தியாவில் முதலீடு செய்வதிலும் சீனாவிடம் கடுமை காட்டிவருகிறது இந்திய அரசு. 

சீனா மீது பொருளாதார ரீதியான அதிரடியான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துவருகிறது. அந்தவகையில், விவோவுடனான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிசிசிஐ. இதையடுத்து புதிய ஸ்பான்சருக்கான போட்டியில், ஜியோ, டாடா, ட்ரீம் 11, பைஜூஸ், அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில்,  இந்த போட்டியில் பதஞ்சலி நிறுவனமும் இணைந்துள்ளது. ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் மூலம் உலகளவில் பதஞ்சலி நிறுவனத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்பதால், இந்த முயற்சியில் இறங்கியுள்ளது பதஞ்சலி நிறுவனம். அதுமட்டுமல்லாது, உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து தற்சார்பு இந்தியா திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருக்கும் நிலையில், அந்தவகையில் இந்திய நிறுவனம் என்றவகையில் தேசியவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் பதஞ்சலி நிறுவனமும் போட்டியில் இணைந்துள்ளது.