Asianet News TamilAsianet News Tamil

IND vs PAK கேட்ச்சை கோட்டை விட்ட அர்ஷ்தீப் சிங்கை வைத்து பிரிவினையை தூண்டும் பாகிஸ்தானியர்கள்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் அர்ஷ்தீப் சிங் முக்கியமான கட்டத்தில் கேட்ச்சை கோட்டைவிட்டதையடுத்து, அவரை காலிஸ்தானி என்று கூறுவதுடன், விக்கிபீடியாவில் அவரது நாட்டை காலிஸ்தான் என்று மாற்றி பாகிஸ்தானியர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
 

Pakistani Twitter accounts fuelling hate against Indian bowler Arshdeep Singh exposed asia cup 2022
Author
First Published Sep 5, 2022, 10:18 AM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அரைசதம்(60) மற்றும் ரோஹித் - ராகுல் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது.

182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, கடைசி ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது ரவி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்.

இதையடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் ஆசிஃப் அலியும் குஷ்தில் ஷாவும் இணைந்து 19 ரன்களை விளாசினர். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட போட்டி முடிந்துவிட்டது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன் தான் தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டது.

இதையும் படிங்க - Asia Cup: ரிஸ்வான், நவாஸ் அதிரடி பேட்டிங்.. இந்தியாவை வீழ்த்தி பழிதீர்த்த பாகிஸ்தான்

அர்ஷ்தீப் ஆசிஃப் அலியின் கேட்ச்சை பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கக்கூடும். அர்ஷ்தீப் சிங் கோட்டைவிட்டது கேட்ச்சை அல்ல; மேட்ச்சை என்பது உண்மைதான். ஆனால் அது அனைத்து வீரர்களுக்கும் நடப்பதுதான். அது இயல்பான ஒன்று.

ஆனால் பாகிஸ்தானியர்கள் இதுமாதிரியான சம்பவத்தை வைத்து பிரிவினையை தூண்டுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அதைத்தான் இப்போதும் செய்துள்ளனர். 2019 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷமி ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கியபோது, ஷமியை இனப்பிரிவினையை தூண்டிவிடமுயன்றனர்.

இப்போது அர்ஷ்தீப் சிங்கை வைத்து பிரிவினையை தூண்ட முயல்கின்றனர். அர்ஷ்தீப் சிங் கேட்ச்சை விட்டதும், அவரை ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் காலிஸ்தானி என்று கூறியதாக டுவிட்டரில் பாகிஸ்தானியர்கள் பிரசாரம் செய்துவருகின்றனர். மேலும் பிரிவினையை தூண்டும் வகையில், அதைவைத்து டுவிட்டரில் வைரலாக்கி பிரசாரம் செய்யும் பாகிஸ்தானியர்கள், உச்சபட்சமாக விக்கிபீடியாவில் அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானி என்று மாற்றியுள்ளனர். 

சுதந்திரத்திற்கு முன் சீக்கியர்களுக்கான தனி நாடு (காலிஸ்தான்) என்று வலியுறுத்தப்பட்டது. அதற்காக காலிஸ்தான் இயக்கம் என்ற ஒரு அமைப்பும் செயல்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை பற்றிய பேச்சு வார்த்தை நடந்த காலகட்டத்தில், சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாப் மாநிலத்தையும் மற்றும் பாகிஸ்தானில் சீக்கியர்கள் அதிகமாக வசித்த ஒரு பகுதியையும் இணைத்து சீக்கியர்களுக்கென தனி நாடு அமைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். 

இதையும் படிங்க - தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யார் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர்..? ராகுல் டிராவிட் ஓபன் டாக்

அதன் அடிப்படையில் தான், இப்போது அர்ஷ்தீப் சிங்கை வைத்து பிரிவினை ஆட்டத்தை ஆடுகின்றனர் பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தானின் இந்த சூட்சமத்தை இந்தியர்கள் புரிந்துகொண்டு முறியடிக்க வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios