பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் மற்றும் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஆகிய இருவரும் சதமடித்தனர். இவர்களின் பொறுப்பான சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. 

212 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி வீரர்கள், இரண்டாவது இன்னிங்ஸிலும் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். இன்னிங்ஸின் 41வது ஓவரில் நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வங்கதேச பேட்டிங் ஆர்டரை சரித்தார். அந்த ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, அடுத்த 44 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸில் 168 ரன்களுக்கே வங்கதேசம் ஆல் அவுட்டானது. 

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, தைஜுல் இஸ்லாம், மஹ்மதுல்லா ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் நசீம் ஷா. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை நசீம் ஷா படைத்துள்ளார். 

2003ல் அலோக் கபாலி என்ற வங்கதேச பவுலர் தனது 19வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அதுதான் இள வயதில் ஹாட்ரிக் வீழ்த்திய சாதனையாக இருந்தது. இந்நிலையில், 16 வயது 359 நாட்கள்(கிட்டத்தட்ட 17 வயது) வயதான நசீம் ஷா, வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அலோக் கபாலியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் நசீம் ஷா. முகமது சமிக்கு(2002ல் ஹாட்ரிக் போட்டார்) பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் நசீம் ஷா படைத்துள்ளார்.