உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பையில் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் மண்ணை கவ்வியது. வெஸ்ட் இண்டீஸிடம் படுமோசமாக தோற்ற பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி கண்டது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டௌண்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக அவருக்கு பதிலாக ஷான் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னர் ஸாம்பா பெரிதாக சோபிக்காததை அடுத்து அவரை நீக்கிவிட்டு கேன் ரிச்சர்ட்ஸன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த ஆடுகளத்தின் கண்டிஷனை கருத்தில்கொண்டு ஸ்பின்னரை ஓரங்கட்டிவிட்டு ஃபாஸ்ட் பவுலரை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், ஸ்மித், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), குல்டர்நைல், பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன்.  

பாகிஸ்தான் அணி:

இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான், பாபர் அசாம், ஹஃபீஸ் அகமது, சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, வஹாப் ரியாஸ், முகமது ஆமீர்.