உலக கோப்பை தொடரை மோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தை அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. 

இந்த உலக கோப்பையில் இதுவரை 7 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அதேநேரத்தில் இங்கிலாந்து அணி அதன் எஞ்சிய 2 போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.

அந்த வகையில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது பாகிஸ்தான். ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை. எனவே அந்த அணிக்கு இந்த உலக கோப்பை தொடரில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டி. 

பாகிஸ்தான் அணியில் ஆரம்பத்தில் சில போட்டிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் ஹசன் அலி, ஷோயப் மாலிக் ஆகியோரை நீக்கிவிட்டு ஷாஹீன் அஃப்ரிடி, சொஹைல் ஆகியோரை கொண்டுவந்த பிறகு அந்த அணி அபாரமாக செயல்பட்டுவருகிறது. 

எனவே பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றங்களும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை; மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புமில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் இந்த போட்டியில் ஆட வாய்ப்புள்ளது. ஹாரிஸ் சொஹைல் வருகைக்கு பிறகு தான் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் சிறந்து விளங்குகிறது. எனவே இந்த போட்டியிலும் அனுபவ வீரர் ஷோயப் மாலிக் மற்றும் ஆல்ரவுண்டர் ஹசன் அலி ஆகிய இருவரும் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. 

உத்தேச பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், ஹாரிஸ் சொஹைல், சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், ஷதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹீன் அஃப்ரிடி.