பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

பாகிஸ்தான் அணி இந்த தொடரில் புதிய கேப்டன்களின் தலைமையில் களமிறங்கவுள்ளது. அசார் அலியின் தலைமையில் டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அணி, இந்த தொடரை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளது. 

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமானவை என்பதால், வலுவான மற்றும் தரமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் செல்லவுள்ளது பாகிஸ்தான். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து, நல்ல வேகத்துடன் நன்றாக பவுன்ஸும் ஆகும். எனவே பாகிஸ்தானில் உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக பந்துவீசி தனது வேகத்தால் மிரட்டிய 16 வயது இளம் வீரரான நசீம் ஷா அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

நசீம் ஷா குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவரும் தலைமை பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக், நசீம் ஷா புதிய மற்றும் பழைய ஆகிய இரண்டு விதமான பந்துகளிலும் அபாரமாக வீசுகிறார். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவர் எப்படி வீசுகிறார் என்பதை காண நாங்கள் அனைவருமே ஆவலாக உள்ளோம். 

முதல் தர கிரிக்கெட்டில் நசீம் அபாரமாக வீசியிருக்கிறார். அவர் வீசும் வேகத்திற்கு, அவர் மட்டும் நல்ல லைன் அண்ட் லெந்த்தில் துல்லியமாக வீசினால் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ஆச்சரியங்களை நிகழ்த்துவார் என மிஸ்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் ஆட எனக்கு வாய்ப்பு கிடைத்தால், எனது வேகமான ஸ்விங் பவுலிங்கின்மூலம் தேர்வாளர்கள் உட்பட அனைவரையும் கவர்வதே எனது இலக்கு என நசீம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.