ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதளபாதாளத்தில் கிடக்கும் பாகிஸ்தான் அணி, டி20 கிரிக்கெட்டில் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும்படியாக ஆடிவந்தது. ஆனால் அதிலும் தற்போது படுமோசமாக சொதப்பியது. உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது பாகிஸ்தான் அணி. 

உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கொட்டாவி விட்டு சிக்கிய சர்ஃபராஸ் அகமது, தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது ஃபிட்னெஸை அனைத்து தரப்பினரும் கழுவி ஊற்றினர். இப்படி தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் கேப்டனை பார்த்ததே இல்லை எனவும் இந்தியாவுக்கு எதிராக பவுலிங்கை தேர்வு செய்ததற்காக மூளையில்லா முட்டாள் கேப்டன் என்றும் சர்ஃபராஸை அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

உலக கோப்பைக்கு பின்னர் சர்ஃபராஸ் அகமதுவை கேப்டன்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தபோதும், புதிய தலைமை பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் பொறுப்பேற்ற மிஸ்பா உல் ஹக், சர்ஃபராஸே கேப்டனாக தொடர்வார் என்றார். 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சொந்த மண்ணில் கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் அணி, நம்பர் 1 அணியாக இருக்கும் டி20 ஃபார்மட்டில் இலங்கையிடம் மூன்று போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. இந்நிலையில், பாகிஸ்தானில் நேஷனல் டி20 தொடர் நடக்கும் நிலையில், சிந்து அணியின் கேப்டனாக இருக்கும் சர்ஃபராஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஒரு பத்திரிகையாளர், பாவம் புண்ணியமெல்லாம் பார்க்காமல் ஒரு கேள்வியை நெற்றியில் அடித்தாற்போல் கேட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை நீங்கள் மொத்தமாக ஏமாற்றிவிட்டீர்கள். ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். அப்படியிருக்கையில், நீங்கள் நேஷனல் டி20 தொடரில் ஆடுவதை பார்க்க யார் வருவார்? என்று நறுக்குனு கேட்டார். அதைக்கேட்டு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் நமட்டுச்சிரிப்பு சிரித்தார் சர்ஃபராஸ்.