பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக திகழும் பாபர் அசாம், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுகிறார். இந்திய கிரிக்கெட்டிற்கு விராட் கோலி அளிக்கும் பங்களிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பாபர் அசாம் செய்வார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் ஐந்தாம் வரிசையில் இறக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

அணியின் முக்கியமான பேட்ஸ்மேனை மூன்று அல்லது நான்காம் வரிசையில் இறக்காமல் ஐந்தாம் வரிசையில் இறக்கியது தவறு என்பதே முன்னாள் ஜாம்பவான்களின் கருத்து. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், பாபர் அசாமை ஐந்தாம் வரிசையில் இறக்கியது தவறு என்றும், அவரை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி 580 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்ஸில் பாபர் அசாம் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 340 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த பாபர் அசாம் அபாரமாக ஆடி சதமடித்தார். ஆனாலும் 104 ரன்களில் அவர் அவுட்டாகிவிட்டதால், அதன்பின்னர் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து 335 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இயன் சேப்பல் சொன்ன அதே கருத்தைத்தான் பாகிஸ்தானின் பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இம்ரான் கான் தனக்கு அனுப்பிய மெசேஜை வாசிம் அக்ரம் வெளிப்படுத்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த பாபர் அசாமுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துவிடுங்கள். பாபர் அசாம் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்டவர். எனவே அவரை பின்வரிசையில் இறக்காமல், அடுத்த போட்டியில் நான்காம் வரிசையில் பேட்டிங் ஆட வேண்டும் என்று இம்ரான் கான் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

வாசிம் அக்ரம், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளின் சிறந்த வீரர்கள் முறையே விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோர் அந்தந்த அணிகளில் டெஸ்ட் போட்டிகளில் நான்காம் வரிசையில் இறங்குவது குறிப்பிடத்தக்கது.