உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ஃபகார், இமாம் ஆகிய இருவரும் தலா 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பாபர் அசாமின் பொறுப்பான பேட்டிங்(69 ரன்கள்), ஹாரிஸ் சொஹைலின் அதிரடியான பேட்டிங்(89 ரன்கள்) ஆகியவற்றின் காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 308 ரன்கள் அடித்தது. 

309 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் டுப்ளெசிஸ், டி காக் ஆகிய இருவரை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. ஆம்லா, மில்லர் ஆகிய தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். பெரிய பார்ட்னர்ஷிப் எதுவுமே அமையாததால் தென்னாப்பிரிக்க அணி 259 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் அணி வழக்கம்போலவே இந்த போட்டியிலும் ஃபீல்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. கேட்ச்களை விட்டு தள்ளினர். ஆனால் அந்த வாய்ப்புகளை கூட தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

பாகிஸ்தான் ஃபீல்டிங்கைவிட தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மோசமாக பேட்டிங் ஆடினார்கள். டுப்ளெசிஸ் விக்கெட்டுக்கு பிறகு மில்லரும் வாண்டெர் டசனும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டிருந்தபோது, வஹாப் ரியாஸ் வீசிய 37வது ஓவரின் 4வது பந்தில் வாண்டெர் டசன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச்சை பாகிஸ்தான் கேப்டனும் விக்கெட் கீப்பருமான சர்ஃபராஸ் அகமது கோட்டைவிட்டார். மிகவும் எளிதான அந்த கேட்ச்சை அவர் விட, அதற்கு ஒரு ரன் எடுத்தனர். 

அதற்கு அடுத்த பந்திலேயே மில்லரும் தேர்டு மேன் திசையில் கேட்ச் கொடுத்தார். இதுவும் எளிதான கேட்ச் தான். ஆனால் அதை முகமது அமீர் தவறவிட்டார். ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 கேட்ச்களை கோட்டைவிட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். இது ஒரு பவுலரை செம கோபப்படுத்தும் விஷயம். ஒரு பவுலர் கஷ்டப்பட்டு விக்கெட் எடுக்கும் பந்துகளை வீசும்போது, அசால்ட்டாக ஃபீல்டர் அந்த கேட்ச்சை விடுவது என்பது மோசமான விஷயம். அதுவும் அடுத்தடுத்த பந்துகளில் கேட்ச் விடுவது என்பது மிகப்பெரிய கொடுமை. 

ஆனால் அந்த வாய்ப்புகளை கூட பயன்படுத்தி கொள்ளாமல் அடுத்த 2-3 ஓவர்களிலேயே வாண்டெர் டசனும் மில்லரும் ஆட்டமிழந்தனர்.