Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி மட்டுமே செய்த சாதனையில் இணைந்தது பாகிஸ்தான்.. செம ரெக்கார்டு

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான சாதனை ஒன்றை செய்துள்ளனர். 

pakistan match the feat of india with top 4 batsmen scored ton in test cricket
Author
Karachi, First Published Dec 22, 2019, 3:24 PM IST

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் டிரா ஆனது. இரண்டாவது போட்டி கராச்சியில் நடந்துவருகிறது. 

கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 271 ரன்கள் அடித்தது. 

80 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். சிறப்பாக ஆடிய இருவருமே சதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 278 ரன்களை குவித்தனர். ஷான் மசூத் 135 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் அபித் அலியுடன் கேப்டன் அசார் அலி ஜோடி சேர்ந்தார். அபித் அலியுடன் இணைந்து அவரும் சிறப்பாக ஆடினார். சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடி இரட்டை சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருந்த அபித் அலி 174 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் அசார் அலியுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். 

இவர்களும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். ஒவ்வொரு விக்கெட்டையும் எடுப்பதற்குள் இலங்கை பவுலர்கள் நொந்து போயினர். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானின் பேட்டிங் ஆர்டரை சரித்த இலங்கை பவுலர்களால், இரண்டாவது இன்னிங்ஸில் அப்படி செய்ய முடியவில்லை. 355 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. 

pakistan match the feat of india with top 4 batsmen scored ton in test cricket

மூன்றாவது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் அசார் அலியும் இணைந்து 148 ரன்களை குவித்தனர். கேப்டன் அசார் அலியும் சதமடித்தார். 118 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பாபர் அசாமும் சதமடித்ததுடன், 3 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதன்மூலம் 475 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி, 476 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே மற்றும் குசால் மெண்டிஸின் விக்கெட்டுகளை 40 ரன்களுக்கே வீழ்த்திவிட்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு அருகில் உள்ளது. 

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்களான ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி மற்றும் பாபர் அசாம் ஆகிய நால்வருமே சதமடித்தனர். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே இன்னிங்ஸில் முதல் 4 பேட்ஸ்மேன்களும் சதமடித்த இரண்டாவது அணி என்ற சாதனையை பாகிஸ்தானுக்கு இவர்கள் படைத்து கொடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக 2007ல் தாக்காவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்களான தினேஷ் கார்த்திக், வாசிம் ஜாஃபர், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய நால்வரும் ஒரே இன்னிங்ஸில் வரிசையாக சதமடித்தனர். 

இந்நிலையில், இந்திய வீரர்கள் இந்த வரலாற்று சாதனையை படைத்து, 12 ஆண்டுகள் ஆன நிலையில், அதே சாதனையை பாகிஸ்தான் வீரர்களும் செய்து, இந்திய அணியுடன் இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios