ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு மோசமான சம்பவத்தை பாகிஸ்தான் அணி முதன்முறையாக செய்துள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற முன்னிலையில் தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்தார். அவர் 69 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப், ஸ்டோய்னிஸ் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அதன்பின்னர் மேக்ஸ்வெல்லும் அலெக்ஸ் கேரியும் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல் 98 ரன்களில் கடைசி ஓவரில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அலெக்ஸ் கேரியும் அரைசதம் அடித்தார். இவர்களின் பொறுப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 277 ரன்களை குவித்தது. 

278 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடிய அபித் அலி - முகமது ரிஸ்வான் ஜோடி 144 ரன்களை குவித்தது. சதமடித்த அபித் அலி 112 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டுக்கு பிறகு மளமளவென பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. உமர் அக்மல், சாத் அலி, இமாத் வாசிம், யாசிர் ஷா, உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். எனினும் கடைசி ஓவரில் அவர் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 271 ரன்கள் மட்டுமே எடுத்ததை அடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

280 ரன்களுக்கும் குறைவான இலக்கை விரட்டும்போது, இரண்டு வீரர்கள் சதமடித்தும் ஒரு அணி தோற்றது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதன்முறை.