உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிகளை பெற்றபோதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

பாகிஸ்தான் அணி தவறுகளையும் சிக்கல்களையும் கலைந்து மீண்டெழ வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி நிறைய திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்து அணியை வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியை வளர்த்தெடுக்கும் பணியை பிரதமரும் உலக கோப்பை வின்னிங் கேப்டனுமான இம்ரான் கான் நேரடியாக களத்தில் குதிக்கவுள்ளார். பாகிஸ்தான் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், உலக கோப்பைக்கு பின்னர் பாகிஸ்தான் அணியை நானே நேரடியாக கட்டமைக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். என் வார்த்தையை குறித்துவைத்து கொள்ளுங்கள். அடுத்த உலக கோப்பைக்கு நீங்கள் பார்க்கப்போகும் பாகிஸ்தான் அணி வேறு லெவலில் இருக்கும் என்று இம்ரான் கான் தெரிவித்திருந்தார். 

உலக கோப்பையில் தொடர் தோல்விகளை சந்தித்த நேரத்தில் கேப்டன் சர்ஃபராஸ் அகமது மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது கேப்டன்சி மற்றும் ஃபிட்னெஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஒருவர் ஃபிட்னெஸே இல்லாமல் தொப்பையுடன் இருப்பதை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன் என்றும், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து, மூளையில்லா முட்டாள் கேப்டன் என்றும் சர்ஃபராஸ் அகமதுவை அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன்பின்னர் அண்மையில் கூட, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு சர்ஃபராஸை நீக்கிவிட்டு ஹாரிஸ் சொஹைலை கேப்டனாக்க வேண்டும் என்று அக்தர் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், டெஸ்ட் அல்லது ஒருநாள்-டி20 அணிகளில் ஏதாவது ஒன்றில் சர்ஃபராஸ் அகமது கேப்டன் பொறுப்பை துறந்துவிட்டு தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். ஏதாவது ஒரு அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதுதான் சர்ஃபராஸ் அகமது மீதான நெருக்கடியை குறைக்கும் எனவும் ஜாகீர் அப்பாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.