டி20 உலக கோப்பை, ஐபிஎல் நடத்தப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்டது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் கதறுகின்றனர். 

கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு கிரிக்கெட் அட்டவணை முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர், கொரோனா அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

அக்டோபர் 18ம் தேதி முதல் டி20 உலக கோப்பை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் டி20 உலக கோப்பை தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்டதால், ஐபிஎல்லை அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் நடத்த திட்டமிட்ட பிசிசிஐ, ஐசிசியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருந்தது. இந்நிலையில், டி20 உலக கோப்பையை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக கடந்த 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐசிசி. 

எனவே செப்டம்பர் 26 முதல் நவம்பர் முதல் வாரம் வரையிலான காலத்தில் ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிசி நிர்வாகக்குழு கூடி முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். டி20 உலக கோப்பை தள்ளிப்போனதால் ஐபிஎல் நடப்பது உறுதியாகியுள்ளது. அதனால் ஐபிஎல்லில் ஆடும் சர்வதேச வீரர்கள் சந்தோஷமாக உள்ளனர். 

ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட அனுமதிக்கப்படாத நிலையில், ஐபிஎல்லுக்காகவே திட்டமிட்டு டி20 உலக கோப்பையை ஒத்திவைத்திருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வயிற்றெரிச்சலில் கதறுகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான ரஷீத் லத்தீஃப் மற்றும் ஷோயப் அக்தர் ஆகிய இருவரும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பேசியுள்ள ரஷீத் லத்தீஃப், உலகின் அனைத்து கிரிக்கெட் வாரியங்களுமே பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான். ஆனால் பிசிசிஐ மட்டுமே உயர்வு கிடையாது. பிசிசிஐ தலைவர் கங்குலி, ஆசிய கோப்பை ஒத்திவைக்கப்படுவதாக முன்கூட்டியே அறிவித்தார். இவையனைத்துமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்று ரஷீத் லத்தீஃப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அக்தர், டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை ஆகிய இரண்டு தொடர்களும் இந்த ஆண்டு நடந்திருக்க வேண்டியவை. அவற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியிருக்க வேண்டியது. இதன் பின்னணியில் நிறைய பின்னணியில் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதற்குள் போக நான் விரும்பவில்லை. டி20 உலக கோப்பை இந்த ஆண்டே நடத்தியிருக்கலாம். ஆனால் டி20 உலக கோப்பையை அவர்கள்(பிசிசிஐ) கண்டிப்பாக நடத்த விடமாட்டார்கள் என்று நானும் ரஷீத்தும் தொடர்ச்சியாக சொல்லிவருகிறோம். டி20 உலக கோப்பை எப்படி போனால் என்ன, ஆனால் ஐபிஎல்லை நடத்திவிட வேண்டும் என்று டி20 உலக கோப்பை ஒத்திவைப்பை சாடியுள்ளார் அக்தர்.