உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. எதிரணிகளுக்கு சவால் விடுக்கும் அளவிற்கு ஆடவேயில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடி வென்றது. அதன்பின்னர் தொடர் தோல்விகள்.

பாகிஸ்தான் அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. எனவே இனிமேல் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பேயில்லை. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை விட, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான். 

ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பரபரப்பே இல்லாமல் ஒருதலைபட்சமான போட்டியாகவே முடிந்துவிட்டது. 337 ரன்களை குவித்த இந்திய அணி, வெறும் 212 ரன்களுக்கு சுருட்டி டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சொதப்பி தோல்வியை தழுவியது. 

பாகிஸ்தான் அணியிடம் டீம் ஸ்பிரிட்டே இருப்பது போன்று தெரியவில்லை. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக போராடவே இல்லை என்பது முன்னாள் வீரர்களின் ஆதங்கம். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் படுமோசமாக ஆடியது. வலுவான கேப்டன் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். சர்ஃபராஸ் அகமது உத்தி ரீதியாகவும் கள வியூகத்திலும் கைதேர்ந்தவராக இல்லை. 

இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் வீரர்கள் வைத்து செய்யப்பட்டனர். 

குறிப்பாக கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி, ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கேப்டன் சர்ஃபராஸை, மூளையில்லாத கேப்டன் என ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

பாகிஸ்தான் வீரர்கள், எங்களை விட்ருங்க என்று கெஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். ரசிகர்கள் கூட விமர்சனத்தை நிறுத்திவிட்ட நிலையில், முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் நின்றபாடில்லை. 

சர்ஃபராஸ் அகமது கேப்டன் ஆனதே ஒரு விபத்து என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆதிக் ஜாவேத் விமர்சித்துள்ளார். சர்ஃபராஸ் குறித்து பேசிய ஜாவேத், சர்ஃபராஸ் மிக மிக பலவீனமான கேப்டன். களத்திலும் சரி, களத்துக்கு வெளியேயும் சரி, அவர் திறமையான கேப்டனாக செயல்படுவதில்லை. 2015லிருந்து அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த சர்ஃபராஸ், பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆனதே ஒரு விபத்து என கடுமையாக சாடியுள்ளார்.