உலக கோப்பையில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் நிலையில், பாகிஸ்தான் அணி படுமோசமாக சொதப்பிவருகிறது.

இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறுவதும் உறுதி.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக கருதப்படும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான போட்டியைவிட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான். ஆனால் அந்த போட்டி சுவாரஸ்யமே இல்லாமல் ஒருதலைபட்சமான போட்டியாக அமைந்துவிட்டது. 

ரோஹித், ராகுல், கோலி ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 336 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியை 40 ஓவர்களில் 212 ரன்களுக்கு சுருட்டி டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாகிஸ்தான் அணியும் கேப்டன் சர்ஃபராஸ் கானும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகினர். 

இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என்று டுவீட் செய்திருந்தார். அவரது டுவீட்டுக்கு ரீடுவீட் செய்த பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஹசன் அலி, உங்கள் எண்ணம் நிறைவேற, இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார். 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஹசன் அலியின் பவுலிங்கைத்தான் ரோஹித் வெளுத்தெடுத்தார். அதனால் ஹசன் அலி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஹசன் அலியை பாகிஸ்தான் ரசிகர்கள் அள்ளி தூற்றிவிட்டனர். இதையடுத்து தனது டுவீட்டை நீக்கிவிட்டார் ஹசன் அலி.