சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணி, 2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதுமட்டுமல்லாமல் டி20 தரவரிசையில் முதலிடத்திலும் இருந்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக ஆடி, தொடர் தோல்விகளை சந்தித்தது. 

உலக கோப்பையில் தோற்றது மட்டுமல்லாமல், சொந்த மண்ணில் நீண்ட இடைவெளிக்கு பின் கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் அணி, அது நம்பர் 1 இடத்தில் இருக்கும் டி20 ஃபார்மட்டில் இலங்கையிடம் ஒயிட்வாஷ் ஆனது, அந்த அணிக்கு மரண அடியாக விழுந்தது. 

சர்ஃபராஸ் அகமது கேப்டனாகவும் சரியாக செயல்பட முடியாமல், பேட்ஸ்மேனாகவும் சோபிக்க முடியாமல், ரெண்டுங்கெட்டானாக திணறினார். கேப்டன்சி நெருக்கடி அவரது பேட்டிங்கையும் பாதித்தது. அதனால் அவர் இரண்டிலுமே சொதப்பினார். அந்த நெருக்கடியை கையாள முடியாமல் நிராயுதபாணியாக நின்றார். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டு, டெஸ்ட் அணிக்கு அசார் அலியும் டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கேப்டன்சியில் இருந்து மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய தொடருக்கான, பாகிஸ்தான் அணியிலிருந்தே சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.

சர்ஃபராஸ் அகமதுவின் நீக்கம் குறித்து விளக்கமளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஏசான் மணி, ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த சர்ஃபராஸ் அகமதுவை அணியிலிருந்து நீக்குவது என்பது மிகவும் கடினமான முடிவு. ஆனால் அவர் ஃபார்மில் இல்லாததுடன் நம்பிக்கையையும் இழந்துவிட்டார். அதை வெளிப்படையாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே அணியின் நலன் கருதி சர்ஃபராஸை நீக்க வேண்டியதாயிற்று என்று மணி தெரிவித்தார்.